ஸ்டாலின் யாரை கை நீட்டுகிறாரோ அவரே பிரதமர்: அமைச்சர் சக்கரபாணி!

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியில் யாரை பார்த்து கை நீட்டுகிறாரோ அவர் தான் இந்திய நாட்டின் பிரதமர்” என்று கரூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

கரூர் மக்களவை தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜோதிமணி. இவர் இன்று (மார்ச் 27) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா எம்.பி ஆகியோருடன் சென்று, கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலிடம் ஜோதிமணி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, கரூரில் இண்டியா கூட்டணியின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:-

கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த முறை 40 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியில் யாரை பார்த்து கை நீட்டுகிறாரோ அவர் தான் இந்திய நாட்டின் பிரதமர். தமிழகத்தில் கடந்த 34 மாதங்களில் ஏராளமான சாதனை திட்டங்களை தமிழக முதல்வர் செய்துள்ளார். இந்த சாதனைகளை எடுத்துக் கூறி மக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்போம்.

கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை 4.20 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழக முதல்வர் ஏராளமான தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து உள்ளது. தமிழகத்தில் இருந்து வரியாக ஒரு ரூபாய் பெறும் மத்திய அரசு தமிழகத்துக்கு வெறும் 28 பைசா மட்டுமே கொடுக்கிறது. ஆனால் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கு அள்ளி கொடுக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.

தமிழக முதல்வர் மற்றும் மாநில இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி உள்ளது. 40 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.