பானை சின்னம் கோரி விசிக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணை செய்ய உள்ளது.
மக்களவை தேர்தலில் தங்களுக்கு பொது சின்னமாக பானை சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக மனு அளித்தது. ஆனால், “கடந்த 2 பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க இயலாது” என்று ஆணையம் கடிதம் அனுப்பியது.
இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக வழக்கு தொடர்ந்தது. 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் முறையே 1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத வாக்குகள் பெற்றதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, விசிகவுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன் கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் நேற்று மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், பானை சின்னம் கோரி விசிக சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அதனை அவசர மனுவாக கருதி இன்று பிற்பகல் விசாரணை செய்வதாக அறிவித்ததனர்.
இதற்கிடையே, உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகளுக்கு கண்டிப்பாக பானை சின்னம்தான். இதில் எந்த குழப்பமும் வேண்டாம்” என்று தெரிவித்தார்.