ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை?: விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!

ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இதனால் ஸ்டார் தொகுதி ஆகியுள்ளது கோவை நாடாளுமன்றத் தொகுதி. இதனால் நாளுக்கு நாள் கோவை தேர்தல் களம் பரபரப்படைந்து வருகிறது.

இந்நிலையில், கோவை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு ஆரத்தி தட்டிற்கு கீழே மறைத்து வைத்து பணம் கொடுப்பது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் விதிமீறல் என்ற நிலையில், அண்ணாமலை, ஆரத்தி தட்டுக்கு கீழே ரூபாய் நோட்டை மறைத்து வைத்து கைகளில் திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிற அரசியல் கட்சிகளால் அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கோவையில் பணப்புழக்கம் இருக்கும். ஆனால் நான் இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரப்போவதில்லை. வாக்கு சேகரிப்புக்காக பணத்தை செலவு செய்யப் போவதும் இல்லை. அதற்கு பதிலாக மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்பதை காட்ட உள்ளேன்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சையும், ஆரத்தி தட்டுக்கு அடியில் வைத்து அவர் பணம் கொடுக்கும் காட்சியையும் பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது தேர்தல் நடத்தும் அலுவலரான கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், சம்பந்தப்பட்ட வீயியோவை காவல்துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.