திமுகவின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி: பிரதமர் மோடி!

“திமுகவின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல பாஜக முனைப்பு காட்டுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் தமிழக பாஜக தொண்டர்களுடன் நமோ செயலி மூலம் உரையாடினார். ‛எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள பாஜக பூத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது தேர்தலுக்கு அவர்கள் எந்த அளவுக்கு தயாராகிவிட்டனர். மத்திய அரசின் திட்டங்கள் பற்றி அறிந்துள்ளார்களா? என்பது பற்றி கேள்விகளை கேட்டார். மேலும் வரும் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும், மக்கள் நலத்திட்டங்கள் பற்றி அனைவரும் எடுத்து கூற வேண்டும் என்றும், எப்படி மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்த செல்லலாம் என்பது தொடர்பாகவும் அறிவுரைகளை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலின்போது கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த பாஜகவின் பூத் தலைவர் முருகேசன் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி அவரிடம், ‛‛உங்கள் தொகுதியின் பாஜக வேட்பாளர் யார்? பூத் பணிகள் எப்படி செல்கிறது? தற்போது உங்களுடன் எத்தனை பேர் உள்ளனர்?” மத்திய அரசின் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளின் பட்டியல் உங்களிடம் உள்ளதா? என்று கேள்வி கேட்டார். அதற்கு முருகேசன், ‛‛இப்போது என் அருகே வானதி சீனிவாசன் இருக்கிறார். ஆண்கள், பெண்கள் என்று தலா 35 முதல் 40 பேர் உள்ளனர். அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார்” என்றார். மேலும் மத்திய அரசு திட்டத்தில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் திட்டம் வாரியாக பட்டியலிட்டார்.

அதை கேட்ட பிரதமர் மோடி, ‛‛ரொம்ப சந்தோஷம். அண்ணாமலைக்கு முக்கிய வேலையை நான் கொடுத்திருக்கிறேன். மொத்த தமிழ்நாட்டையும் ஜெயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களையும் ஜெயிப்பதற்கான வேலையில் அவர் இறங்கி இருப்பார். இதனால் நீங்கள் தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும். அண்ணாமலையிடம் நீங்கள் தொகுதிக்கு வர வேண்டாம். உங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனக்கூறி பணியாற்ற வேண்டும். அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யட்டும். மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரையும் நான் அண்ணாமலையாக தான் பார்க்கிறேன். அனைவரும் வெற்றி பெற்று டெல்லி வர வேண்டும் என விரும்புகிறேன். இதனால் அண்ணாமலையின் வெற்றிக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, “இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி ஆப் வாயிலாக எங்களின் கடின உழைப்பாளிகளாக விளங்கும் தமிழக பாஜக தொண்டர்களுடனான ‘எனது பூத் வலிமையான பூத்’ உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் உள்ள நமது தொண்டர்கள் நமது கட்சியின் நல்லாட்சி குறித்து மாநிலம் முழுவதும் திறம்பட பரப்பப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும் பாராட்டுக்குரியது.

தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் தமிழகம் எதிர்நோக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.