நாய் என்றைக்கும் சிங்கமாகாது, ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம்: டிடிவி தினகரன்!

டிடிவி தினகரன் வீட்டு காவல் நாய்களாக இருந்தோம், இப்போது சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம் என ஆர்பி உதயகுமார் பேசிய நிலையில், “நாய்கள் என்றைக்கும் சிங்கம் ஆகாது. ஓநாயாக வேண்டுமானால் ஆகலாம்” என டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து, தேனியில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிராக திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஜெயபாலனும் களத்தில் உள்ளனர். ஏற்கனவே தேனியில் டிடிவி தினகரன் எம்.பியாக இருந்துள்ள நிலையில், தற்போது தேனி லோக்சபா தொகுதி தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. தங்க தமிழ்ச்செல்வனும், தினகரனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து ஆர்.பி. உதயகுமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் ஆர்பி உதயகுமார் பேசுகையில் “தினகரன் என்னை பபூன் என்று கூறுகிறார். அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பபூன் தான். ஆனால், டிடிவி தினகரன் பி.எஸ்.வீரப்பா மாதிரியான வில்லன். என்னால் எந்த தீமையும் ஏற்படாது. அவரால் என்னென்ன தீமை ஏற்படும் என்று தெரியும். ஜெயலலிதா இருக்கும்வரை டிடிவி தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம். எங்களை சீண்டி பார்க்க நினைத்தால், எச்சரிக்கிறோம். இப்போது சீறும் சிங்கங்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளோம்” எனப் பேசினார்.

ஆர்.பி. உதயகுமாரின் இந்த பேச்சு குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “நாய் என்றைக்கும் சிங்கமாகாது. நாய் ஓநாயாக வேண்டுமானால் மாறும், சிங்கமாக மாறாது. வீட்டுக்கு காவலாளியாக இருந்தோம் என்று சொல்கிறார் உதயகுமார். வீட்டுக்கு காவல் இருப்பவர்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பார்கள். இவர்களைப் போல துரோகம் செய்ய மாட்டார்கள். இவர்கள் நன்றி இல்லாதவர்கள். துரோகிகளின் கையில் தற்போது அதிமுக உள்ளது. துரோகிகள் அபகரித்து வைத்து இருக்கும் இரட்டை இலையை மீட்டு எடுப்பதற்காகத் தான் நானும், பன்னீர்செல்வமும் போராடி வருகிறோம். திருடுவதற்குத்தானே எங்களை வெளியேற்றினீர்கள். உங்களிடமிருந்து அந்த இயக்கத்தை நாங்கள் மீட்டு, தொண்டர்கள் கையில் கொடுப்போம். நாங்கள் ஒன்றும் பதவிக்கு அலையவில்லை” என்றார்.