தபால் வாக்கு பெற வந்த அதிகாரிகளை திருப்பியனுப்பிய ஏகனாபுரம் மக்கள்!

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக ஏகனாபுரம் மக்கள் அறிவித்துள்ள நிலையில், தபால் வாக்குக்காக வந்த தேர்தல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 8 நாட்களே உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க பிரசாரம் அனல் பறக்கிறது. தேர்தல் நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. அதே போல், 80வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தபால் வாக்குகளை பெறும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தபால் வாக்குப்பதிவு பணியில் 15 குழுவினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தபால் வாக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் நிர்வாகம் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் விதமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. இதன்படி, திங்கள் கிழமை முதல் தபால் வாக்குப்பதிவு சீட்டுக்களை நேரடியாக வீட்டுக்கு சென்று பெறும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் திங்கள் முதல் துவங்கப்படும் இந்த தபால் வாக்கு பதிவு இன்று வரை நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் ஐந்து குழுவினரும், ஆலந்தூரில் நாலு குழுவினரும், காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தலா மூன்று குழுவினரும் என மொத்தம் 15 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் ஊர் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். பல்வேறு வகையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகானபுரம் மக்களின் போராட்டம் 624 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், ஏகானபுரம் கிராமத்திற்கு தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் சென்றனர். ஆனால், மூத்த குடிமக்கள் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ள நிலையில், வாக்களிக்க ஒருவர் கூட தயாராக இல்லை என்று மூத்த குடிமக்கள் அதிகாரிகளை திருப்பியனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமங்களில் மட்டும் எந்த வேட்பாளரும் சென்று வாக்கு சேகரிக்க செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ சேகர், திமுக வேட்பாளர் செல்வம், பாஜக கூட்டணியில் பாஜக வேட்பாளர் ஜோதி ஆகியோர் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையின் 2-வது விமான நிலை யம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு தாலுகாக்களில், பரந்தூரை சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இந்த கிராமங்களில், 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறனர். இவர்கள் இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படுவதால், தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தான் தபால் ஓட்டுகளை போட விடாமால் தேர்தல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.