இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் டரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஈரான் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியிருந்தது.
இதனால் இஸ்ரேலை தாக்குதலில் இருந்து காக்க அமெரிக்கா தனது போர் கப்பல்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது. இந்நிலையில் இஸ்ரேல் சரக்கு கப்பல் ஒன்றையும், ஈரான் ராணுவம் கைப்பற்றியது. இதற்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமனில் இருந்து நடத்தப்பட்டது. இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் இஸ்ரேல் படைகள் நடுவானில் இடைமறித்து தாக்கின. 99 சதவீத ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை இஸ்ரேலுக்கு வெளியே நடுவானில் அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். நேட்டோ, அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து ஒரு அணியிலும், ரஷ்யா, சீனா, ஏமன் மற்றும் வடகொரிய மற்றொரு அணியாகும் போரில் ஈடுபடலாம் என இணைய வாசிகள் கூறியுள்ளனர்.
16-ம் நூற்றாண்டு பிரெஞ்சு ஜோசியர் நாஸ்ட்ரடாம்ஸின் கணிப்புகள் மிகவும் பிரபலம். அவர் எழுதிய ‘தி பிராபசிஸ்’ என்ற புத்தகத்தில் 2024-ம் ஆண்டில் உலகம் மிகப் பெரிய கடற்படை போரை பார்க்க நேரிடும் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் களம் இறங்கியிருப்பதும், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை பார்க்கும் போது, நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் அளித்துள்ள பேட்டியில், ‘‘ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அமெரிக்கா கண்டிக்கிறது. இதை உடனடியாக ஈரான் நிறுத்த வேண்டும். ஈரானுடன் நேரடி மோதலை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயங்காது’’ என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க உதவினால், அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் குறித்து ஜி7 தலைவர்களுடன் விவாதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில், ‘‘ஈரான் வீசிய குண்டுகளை நாங்கள் இடைமறித்து அழித்தோம், இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார். ஈரானுக்கு சரியான பதிலடிகொடுக்கப்படும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, ஜப்பான், செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தாக்குதல் கவலையளிக்கிறது. இது மத்திய கிழக்கு பகுதியின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அமைதி காத்து, உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவசர உதவி தேவைப்பட்டால், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை 972 – 5475207112, 972 – 543278392 ஆகிய எண்களிலும், cons 1.telaviv@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்’’ என கூறியுள்ளது.