கோவையில் ஜி பே மூலம் அண்ணாமலை பணப்பட்டுவாடா?: திமுக புகார்!

கோவை மக்களவை தொகுதியில் ஜி பே மூலம் வாக்காளர்களுக்கு அண்ணாமலை தரப்பில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோயம்புத்தூரில் அண்ணாமலை அவர்கள் தனது ஆதரவாளர்கள் மூலம் வைத்துள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் அந்த தொகுதிக்கு சம்பந்தப்படாத வெளியாட்கள் உள்ளார்கள். இவர்கள் ஜிபே மூலம் பணம் அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர்.

சென்னையை சேர்ந்த திரு.ஜெயப்பிரகாஷ், அண்ணாமலை அவர்களின் மைத்துனர் சிவக்குமார், ஆனந்த், பிரஷாத், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கோவை தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள். தேர்தல் விதிப்படி பிரச்சாரம் முடியும்போது தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் இவர்கள் இந்த விதியை மீறி ஜி பே மூலம் பணம் அனுப்பி கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக கோவை தேர்தல் நடத்தும் அலுவகத்தில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்து உள்ளோம்.

இவர்கள் கோவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளோம். மேலும் கோவை காவல் ஆணையரிடமும் இந்த புகாரை அளித்து உள்ளோம். துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அண்ணாமலைக்கு ஆதரவாக பணம் விநியோகம் செய்த கஜேந்திரன் என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் திரு அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் கமிஷன் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஒருவர் 4 கோடி ரூபாய் உடன் பிடிப்பட்டார். அவருக்கும் திரு.நயினார் நாகேந்திரனுக்கும் என்ன சம்பந்தம் என்பது எல்லோருக்கும் தெரிந்து உள்ளது. பிடிப்பட்ட பணம் எல்லாம் பாஜகவினரிடம் இருந்துதான் பிடிப்பட்டு உள்ளது. ஆனால் இவர்கள் திமுகவினர் மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.