நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் ரூ 4 கோடி பறிமுதல்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.

ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நைனார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்ததாகவும் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே நைனார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ,விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பா.ஜ.க வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.