ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்தது.
இதனையடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது என ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிள்ளது. பலத்த வெடி சத்தம் கேட்டதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து தெளிவான தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் ஆசிய பங்குகள் இன்று கடுமையாக சரிந்ததுள்ளன.