நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்!

“வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார்.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. #Elections2024” என்று பதிவிட்டுள்ளார்.