போலந்தில் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சதித் திட்டம் திட்டியதாக ஒருவரை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.
ஏற்கெனவே, ஜொ்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக இரு ரஷ்யா்களை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்ததால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், போலந்திலும் அதே போன்றதொரு குற்றச்சாட்டின் பேரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இது குறித்து போலந்து சட்ட அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
போலந்தில் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்யும் ரஷ்ய உளவுத் துறையின் சதித் திட்டத்தில் பங்கேற்ற ‘பவெல் கே’ என்பவரைக் கைது செய்துள்ளோம். அவா் போலந்து நாட்டவா். ஜெலெனஸ்கி அடிக்கடி வந்துசெல்லும் ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்களை ரஷ்ய உளவு அமைப்பினரிடம் தெரிவிப்பதற்கு புதன்கிழமை ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது அவா் செய்யப்பட்டாா். உக்ரைன் உளவு அமைப்பினருடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையையொட்டி தென்கிழக்கு போலந்தில் அமைந்துள்ள ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையம் அமெரிக்க படையினரின் பாதுகாப்பில் உள்ளது. உக்ரைனுக்கு அளிக்கப்படும் சா்வதேச ஆயுத மற்றும் நிவாரணப் பொருள்கள் இந்த விமான நிலையம் வழியாகத்தான் அனுப்பப்படுகின்றன.
அதிபா் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட உக்ரைன் தலைவா்கள் நாட்டிலிருந்து உலகின் பிற பகுதிகளுக்குச் செல்ல இந்த விமான நிலையத்தை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனா். இந்தச் சூழலில், ஜெஸோவ்-ஜசியோன்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு ரகசியங்களை ரஷ்ய உளவு அமைப்பினருக்கு அளிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் போலந்து நாட்டவா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஜொ்மனியிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய உளவு அமைப்புடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாக ‘டயட்டா் எஸ்’, ‘அலெக்ஸாண்டா் ஜே’ என்ற இருவரை அந்த நாட்டு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் ரஷ்ய-ஜொ்மன் இரட்டைக் குடியுரிமை பெற்றவா்கள்.