டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் எஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் இந்தியாவுக்கு வருகை தர இருந்தார். எலான் மஸ்க் நாளை ஏப்ரல் 21ஆம் தேதி தனது இந்தியா பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரம் அவரே கூட இது தொடர்பாக ரொம்பவே ஆர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் எல்லாம் பதிவிட்டு இருந்தார். ஆனால், எலான் மஸ்க் திட்டமிட்டபடி தனது பயணத்தை தொடங்கவில்லை. திடீரென அவர் இந்திய பயணத்தை தள்ளி வைத்து இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் இந்தியாவுக்கு வர அவரே ஆர்வமாக இருந்தார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க், தனது இரண்டு நாள் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து திட்டமிட்டிருந்தார். அப்போது அவர் இந்தியாவில் டெஸ்லா நிறுவன முதலீடுகள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அவர் முக்கியமான தனியார் விண்வெளி ஆய்வாளர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெஸ்லா நிறுவன பணிகளால் அவர் தனது பயணத்தை ஒத்தி வைப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். ம்: என்ன

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா பணிகளால் எனது இந்தியா வருகை தாமதமாகி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் நிச்சயம் இந்தியா வருவேன். அந்த பயணத்திற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்கின் வருகை ஒத்திவைக்கப்பட்டாலும், இந்திய சந்தையில் நுழைவது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் சீனாவில் பொருளாதார காரணங்களால் டெஸ்லா விற்பனை மந்தமாக இருக்கிறது. இதனால் எலான் மஸ்க் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் டெஸ்லா வளர்ச்சியில் பிரச்சினை இருக்காது என்பது அவர்கள் திட்டம். இந்தியாவுக்கு ஏற்ப சற்று விலை குறைந்த கார்களை டெஸ்லா விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இருப்பினும், டெஸ்லா எதிர்பார்க்கும் அளவுக்கு வரிவிலக்கு தர இந்தியா தயாராக இல்லை என்றும் இதுவே பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், டெஸ்லா இரு நாடுகளை தாண்டி தனது வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவர்கள் நிச்சயம் இந்தியாவுக்கு வருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதேநேரம் டெஸ்லாவின் இந்தியா தொழிற்சாலை எங்கே அமையும் என்பது இன்னும் இறுதியாகவில்லை. இருப்பினும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் நிச்சயம் ஒன்றில் தான் அமையும் என்றே கூறப்படுகிறது. நாட்டின் பல கார் நிறுவனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்த 3இல் ஒரு மாநிலத்தில் தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் பார்க்கும் போது அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து உலகளவில் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா இருக்கிறது. இப்போது நமது நாட்டில் மின்சார கார்கள் சந்தை பெரியளவில் டெவலப் ஆகவில்லை. இப்போது விற்பனையாகும் மொத்த கார்களில் 2% மட்டுமே மின்சார கார்களாக உள்ளன. இதை வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30%ஆாக மாற்ற வேண்டும் என்பதே இலக்கு. இதனால் மத்திய அரசும் மின்சார கார்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. டெஸ்லாவின் கார் விற்பனை சர்வதேச அளவில் குறைவதால் அவர்கள் இந்தியாா பக்கம் கவனத்தை திரும்பியுள்ளனர். டெஸ்லாவுக்கு போட்டியாக இருக்கும் சீனா மின்சார கார் நிறுவனமான BYD ஏற்கனவே இந்தியாவில் உள்ளது. அவர்கள் மூன்று மாடல்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார்கள். மற்றொரு போட்டியாளரான வியட்நாமின் வின்ஃபாஸ்ட் ஏற்கனவே 2 பில்லியன் முதலீட்டில் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சர்வதேச அளவில் இந்தியா மிக முக்கியமான மின்சார கார்களின் சந்தையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.