கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. ஆங்காங்கே சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்த போதிலும், பெரிதாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே, கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடும் நிலையில், அங்கு பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். அந்த வகையில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் சில குளறுபடி நடப்பதாக எழுந்த புகாரின் பேரில், அங்குள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம்வானதி சீனிவாசன் கூறியதாவது:-
கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு பூத்களிலுமே குளறுபடிகள் நடக்கிறது. குறிப்பாக, வட இந்தியர்களின் வாக்குகள், பிராமணர்களின் வாக்குகளை திட்டமிட்டு நீக்கி இருக்கிறார்கள். இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஒரு குடும்பத்தில் கணவருக்கு ஓட்டு இருக்கிறது. மனைவிக்கு இல்லை. குழந்தைகளுக்கு இருக்கிறது.. பெற்றோர்களுக்கு இல்லை.
இவ்வாறு வேண்டுமென்றே பாஜகவுக்கு விழும் ஓட்டுகளை குறி வைத்து, அதை நீக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு பூத்துகளிலும் இது நடந்திருக்கிறது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் 830 வாக்குகளை நீக்கி இருக்கிறார்கள். இதையடுத்து, அவர்களின் ஒப்புதல் கையெழுத்தோடு நாங்கள் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் வழங்கி இருக்கிறோம். எனவே இந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் விட மாட்டோம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.