தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது; சிஏஏ ரத்து செய்யப்படாது: அமித் ஷா

எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது, சிஏஏ ரத்து செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

நாட்டின் சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்.

பாஜக அரசு சிஏஏ சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடி வரும் இந்து, கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் பார்சி சமூக மக்களுக்கு சகோதரத்துவ அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குகிறது.

ப.சிதம்பரம் இந்த சட்டத்தை ரத்து செய்வதாக பேசியுள்ளார். இதன் மூலம் தேசத்தை சிறந்த முறையில் கட்டமைக்க விரும்புபவர்களின் கனவினை அவமதித்து பேசியுள்ளார். இந்தச் சட்டம் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது, சிஏஏ ரத்து செய்யப்படாது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ப.சிதம்பரம். “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அது ரத்து செய்யப்படும்” என சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.