இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு காலஅட்டவணையை வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, இனிமேல் குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும், குரூப்-2ஏ தேர்வு முறையிலும் மாற்றம் செய்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2024-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை கடந்த 20.12.2023 அன்று வெளியிடப்பட்டது. தற்போது தேர்வர்களின் நலன் கருதியும், தேர்வு முறைகளை விரைந்து செயல்படுத்தவும், தொழில்நுட்ப பதவிகளுக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளை ஒருங்கிணைத்தும் ஒருங்கிணைந்த குரூப்-2ஏ தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுத் திட்டத்தை மாற்றியமைத்தும் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இது தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருத்தப்பட்ட புதிய தேர்வு காலஅட்டவணையின்படி, மொத்தம் 2,030 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜுன் 28-ம் தேதி வெளியிடப்பட்டு, அற்கான முதல்நிலைத் தேர்வு செப். 28-ல் நடைபெறஉள்ளது. குரூப்-2, 2ஏ தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-2 பணிகளுக்கு இனிமேல் நேர்முகத்தேர்வு கிடையாது. மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். மெயின் தேர்வு (பொது அறிவு மற்றும் கட்டாயத் தமிழ் தகுதித்தாள்) வழக்கம்போல் விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
குரூப்-2ஏ மெயின் தேர்வில் பொது அறிவு பகுதியில் விரிவாக விடையளிக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. பொது அறிவு மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் அல்லது ஆங்கிலம் தாள் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். கட்டாய தமிழ் தகுதித்தாள் மட்டும் விரிவாக விடையளிக்கும் வகையில் இருக்கும்.
புதிய தேர்வுமுறை காரணமாக, குரூப்-2ஏ-யின் கீழ் இருந்த நகராட்சி ஆணையர் (கிரேடு-2), தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ) உள்ளிட்ட பதவிகள் தற்போது குரூப்-2-வுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய முறையிலும், குரூப்-2ஏ பணிகளுக்கு மெயின் தேர்வுநடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆனால், டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கூறும்போது, குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்கியிருப்பதை வரவேற்கிறோம். அதேநேரம், குரூப்-2ஏ பணிகளுக்கு மெயின் தேர்வு தேவையில்லை. ஒரே தேர்வுமூலமாக குரூப்-2ஏ பதவிகளை நிரப்பிவிடலாம். மெயின் தேர்வு நடத்துவதால் தேவையில்லாமல் காலதாமதம் ஏற்படும். எனவே, குரூப்-2ஏ பணிகளுக்கு மெயின் தேர்வை நீக்குமாறு டிஎன்பிஎஸ்சி-க்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.