வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைக்க உதயநிதி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருவதோடு, வெப்ப அலையும் வீசி வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் இந்த கோர தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இளநீர், தர்பூசணி, மோர், நுங்கு, பழச்சாறு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சியை தரும் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். அதனால், இவற்றின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. வழக்கமாக, கோடை காலத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இலவச நீர் மற்றும் மோர் பந்தல் அமைப்பது வாடிக்கை. இந்த முறை அவை பெருமளவில் குறைந்துள்ளன. நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்படாததால் மக்கள், பகல் நேரத்தில் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதோடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் குடிப்பதற்கு நீர் இன்றி வெயிலில் அலைவதையும் காண முடிகிறது.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம். கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.