மோடியின் வெறுப்பு பேச்சால் ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் போல ஆகிவிடும்: கனிமொழி

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் தலித் வரலாற்று மாதம் மற்றும் கலைத் திருவிழா 2024ன் வேர்க்கோடுகள் ஓவிய விருது விழா மற்றும் ஓவியக் கண்காட்சி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. இதில் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும், சினிமா இயக்குநருமான பா.ரஞ்சித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

இஸ்லாமியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் உண்டு. தொடர்ச்சியாக அவர்களுக்கு எதிராக வெறுப்பை உருவாக்கும் வகையில் ஒரு பிரதமர் பேசுவது நம் நாட்டில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் லாபத்திற்காக இப்படிப்பட்ட வெறுப்பு, காழ்ப்புணர்வு அவசியமா என்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன். ஒருவேளை தனக்கு அரசியல் லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பிரதமர் இந்த கருத்தை கூறி இருக்கலாம். இப்படிப்பட்ட வெறுப்பு விதைக்கப்படும் போது நாடு முழுவதும் மணிப்பூராக மாறிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.

ஆணவக் கொலைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. நிச்சயமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், ஆணவக்கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்பிலிருந்து மனிதநேயத்தை நோக்கி மக்கள் நகரும் காலத்தில் நிற்கிறோம். அதை நோக்கி தான் தேர்தல் முடிவுகளும் இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.