நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா இன்று திருவனந்தபுரத்தில் ஓட்டுப்போட்ட நிலையில் ‛‛தாமரை தான் மலர வேண்டும்” என அவர் கூறினார்.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இன்று ஒரே கட்டமாக கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கேரளாவை பொறுத்தவரை ஆளும் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே போட்டி உள்ளது. இந்நிலையில் தான் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா இன்று ஓட்டுப்போட்டார். மேலும் மேனகா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலில் மாற்றம் நடந்தால் நன்றாக இருக்கும். ஒரே மாதிரியான முடிவுகள் வந்தால் நன்றாக இருக்காது. கடந்த 15 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான நிர்வாகம் நடந்து வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் புதியவர் வந்தால் தான் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியும். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை மனதில் உள்ளது. எனக்கு தாமரை மலரணும் என்று தான் ஆசை” என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் இடதுசாரிகளின் ஆட்சியும் உள்ளது. இதில் மாற்றம் வர வேண்டும் என நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛கேரளாவில் பாஜக வரவே இல்லை. எங்களை பொறுத்தமட்டில் கேரளாவில் எல்டிஎஃப் (இடதுசாரிகள் கூட்டணி), யுடிஎஃப் (காங்கிரஸ் கூட்டணி) தான் மாறிமாறி ஆட்சியில் இருக்கின்றனர். ஒரு மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛தென்இந்திய மாநிலங்களான கேரளா, தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணிக்க தானே செய்கிறார்கள்?” என்ற கேள்வியை கேட்டார். அதற்கு அவர், ‛‛10 முறை கீழே விழுந்தால் 11வது முறையாக மேலே எழுந்திரிக்க மாட்டார்களா?. இந்த முறை மாற்றம் வரும். நாங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
மேலும், ‛‛கேரளாவில் தாமரைக்கு வாய்ப்புள்ளதா?” என கேட்கப்பட்டது. அதற்கு திரிச்சூர், திருவனந்தபுரத்தில் தாமரைக்கு நல்ல வாய்ப்புள்ளது. திரிச்சூரில் சுரேஷ் கோபி (பாஜக வேட்பாளர்) கண்டிப்பாக வெற்றி பெறுவார். இங்கும் (திருவனந்தபுரம் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டி) தாமரை ஜெயிக்க நிறைய சான்ஸ் இருக்கு. ஏனென்றால் மக்களிடம் பேசும்போது தெரிகிறது. ஆனாலும் முடிவு என்பது மக்கள் கையில் தான் உள்ளது” என்றார்.