‘சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்’ என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று வெள்ளிக் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி நாட்டுக்கு ஒரு புதிய திசையை கொடுத்துள்ளார். அவரது 10 ஆண்டுகால ஆட்சி சுதந்திர இந்தியாவில் ஒரு பொற்காலம். ஒவ்வொரு துறையிலும், இந்தியா புதிய சாதனையை செய்து வருகிறது. இன்று, இந்தியா வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இவை பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் விஷயங்களை சுட்டிக்காட்டுகின்றன. சாம் பிட்ரோடாவின் அறிக்கையைப் பற்றி அனைவரும் அறிவார்கள். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, ஓபிசி இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கிய விதம் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பரம்பரை வரியைப் பற்றியும் பேசுகிறது, இது ஒரு ஆபத்தான அறிகுறியாகும். நாட்டில் உள்ள மக்களின் சொத்துக்களை எக்ஸ்ரே எடுப்போம் என்று காங்கிரஸ் கூறுகிறது. டீன் தலாக்கை மீண்டும் கொண்டு வருவதைப் பற்றியும் பேசுகிறார்கள். பெண்களுக்கு இதைவிட அவமரியாதை வேறு எதுவும் இருக்க முடியாது. சாமானியர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிக்கும் முயற்சி நடந்தால் பாஜக ஒருபோதும் அதை ஏற்காது. இவ்வாறு அவர் கூறினார்.