விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை 16,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை 16,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்டவற்றை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆந்திராவில் வரும் மே 13 ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் அம்மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 175 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய் எஸ் ஷர்மிளா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், சொந்த அண்ணனை எதிர்த்து அரசியலில் நேரடியாக மோதுகிறார் ஒய் எஸ் ஷர்மிளா.

ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், ஆட்சியை தக்க வைப்பதில் ஜெகன் மோகன் ரெட்டி தீவிரம் காட்டி வருகிறார். அனல் பறக்கும் பிரசாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட்டுள்ள நிலையில், இன்று தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியை ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் என மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும். விசாகப்படினம் அரசின் எக்சிகியூட்டிவ் கேபிடலாக இருக்கும். மாநிலத்தின் வளர்ச்சி என்ஜினாக அமராவதி இருக்கும். அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும். விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 13 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.16 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கதப்படும்.

பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும். முதியவர்களுக்கன பென்ஷன் தொகை மாதம் 3 ஆயிரத்தில் இருந்து 3,250 – ஆக 2028 ஜனவரியில் உயர்த்தப்படும். 2029-ல் ரூ.3,500 ஆக உயர்த்தப்படும். பெண்களுக்கான அம்மோ வோடி திட்ட பயணிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தில் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.