சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதாவின் கைக்கூலிகள் என்று ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்தார்.
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா-தெலுங்குதேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது.
மாநில காங்கிரசுக்கு சமீபத்தில் தலைவராகி உள்ள முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காக்கிநாடாவில் நேற்று நடந்த பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-
இந்த மாநிலம் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு அடி முன்னேற்றத்தை கூட காணவில்லை. சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியால் எந்த பயனும் இல்லை. இருவரும் பா.ஜனதாவுடன் கைகோர்த்து உள்ளனர். ஒருவர் கூட்டணி வைத்தும், மற்றொருவர் மறைமுகமாகவும் பா.ஜனதாவின் கைக்கூலியாக உள்ளனர்.
ஆந்திராவுக்கு மீள முடியாத வீழ்ச்சியை பா.ஜனதா கொடுத்து உள்ளது. மாநிலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த அந்த கட்சி, மோசடி செய்து விட்டது. போலவரம் திட்டத்தை பா.ஜனதா புறக்கணித்து விட்டது.
உண்மை நிலவரம் இப்படியிருக்க சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இவ்வாறு ஒய்.எஸ்.சர்மிளா கூறினார்.