பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் சம்மனுக்கு பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் எம்.பி.,யான பிரஜ்வால் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்முறையாக பேசியுள்ளார் பிரஜ்வால் ரேவண்ணா. , “நான் பெங்களூருவில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் எனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு பயணம் செய்துள்ளார். பல பெண்களுக்கு எதிரான அவரின் குற்றச் செயல்களை அமைக்கப்பட்ட விசாரணைக் குழு 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணையை சந்திக்க வைக்கும் வகையில் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.