தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுது!

தலைமைத் தேர்தல் அதிகாரி தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மைத்தன்மை வெளிப்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுதானதாக கூறப்படுகிறது. வேட்பாளர்கள் இந்த சம்பவம் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் சட்டமன்றத் தொகுதி வாரியாக தென்காசி கொடிக்குறிச்சி யு.எஸ்.பி கல்லூரியில் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக தென்காசி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த 93 சிசிடிவி கேமராக்கள் இன்று (30.04.2024) மாலை 3 மணி அளவில் இடி, மின்னல் தாக்கி பழுதடைந்து விட்டதாக மாவட்ட ஆட்சியரின் அறிக்கை கூறுகிறது. அனைத்து வாக்கு எண்ணும் இயந்திரங்களும் ஒரே கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தாலும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இயந்திரங்களும் வெவ்வேறு கட்டிடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கின்ற பொழுது பொருத்தப்பட்டு இருக்கக்கூடிய 93 சிசிடிவி கேமராக்கள் ஒருசேர இடிமின்னல் தாக்கி பழுதடைந்து விட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. மாலை 3 மணிக்கு பழுதானதாக கூறப்பட்ட சிசிடிவி கேமராக்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு, இரவு 8 மணி அளவில் தான் வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு என்ன மையத்தில் பொருத்தப்பட்டுள்ள 93 கேமராக்களும் இடி மின்னலால் பழுதடைந்ததாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை கூறியிருப்பினும், அதில் பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுகின்றன. இடைப்பட்ட 5 மணி நேரத்தில் என்னவெல்லாம் தவறு நடந்திருக்க கூடும் என்ற பல கேள்விகள் எழுகின்றன. மக்கள் தீர்ப்பை முறைகேடாக மாற்றி அமைக்கும் திட்டத்தில் எவர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, நீலகிரி மற்றும் ஈரோடு தொகுதிகளில் இதுபோன்று சிசிடிவி கேமராக்கள் ஒரே நேரத்தில் பழுதடைந்ததாக வந்த செய்திகளை ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது ஏதோ ஒரு பெரிய முறைகேட்டிற்கான வெளிப்பாடாக இருக்குமோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. எஞ்சி உள்ள நாட்களில் அடிக்கடி இடி, மின்னல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாலும், தேவையற்ற சந்தேகங்களை போக்கும் வகையிலும் இடி, மின்னல் போன்ற பாதிப்புகளால் மின்சார தடை ஏற்பட்டாலும் கூட தொடர் மின்சாரம் கிடைக்கக்கூடிய வகையில் ஆன்லைன் யு.பி.எஸ் மூலமாக அனைத்து சிசிடிவிகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 5 மணி நேரம் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் என்ன நடந்தது? அல்லது வேறு ஏதேனும் முறைகேடு நடந்திருக்கிறதா? என்பது குறித்து முழுமையாக அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மத்திய தேர்தல் அதிகாரிகளும், மாநில தேர்தல் அதிகாரி திரு. சத்யசாகு அவர்களும் உடனடியாக தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உண்மைத்தன்மை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.