இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகள் துண்டிப்பு: கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ!

கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, தனது நாடு இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகையைப் படுகொலை என விவரிக்கும் பெட்ரோ, முன்னதாக இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்வதை ரத்து செய்தார். காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நாஸி ஜெர்மனியில் செய்ததுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.

இது குறித்து பெட்ரோ, “வியாழக்கிழமை முதல், இஸ்ரேல் நாட்டுனான ராஜ்ய உறவுகள் முறிக்கப்படுகின்றன- படுகொலை நிகழ்த்தும் அதிபரை அந்நாடு கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இறந்தால் மனிதநேயம் இறக்கும், நாங்கள் அதனை அனுமதிப்பதில்லை” என சர்வதேச உழைப்பாளர்கள் தின பேரணியின்போது அவர் பேசியுள்ளார்.

இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் காட்ஸ், ”குழந்தைகளை எரித்த, அவர்களைக் கொலை செய்த, பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய, அப்பாவி பொதுமக்களைக் கடத்திய, மனித குலம் அறிந்திராத இழிவான அரக்கர்கள் பக்கம் கஸ்டாவோ பெட்ரோ சாய்ந்துள்ளதை வரலாறு நினைவில் கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.