தொழிலாளர் நலன் காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்: திருமாவளவன்!

தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள உழைப்பாளர் நினைவு சின்னத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆட்டோ தொழிலாளர்களுடன் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்த பாட்டாளிகளை இந்த நாளில் நினைவு கூர்ந்து நமது உரிமைகளுக்காக போராடி உயர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். இந்தியாவில் 8 மணி நேர வேலையை உறுதி செய்தது சட்டத்துறை அமைச்சராக இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் என்பதை நினைவு கூர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.

மோடி தலைமையிலான தொழிலாளர் விரோத பாசிச பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். மூன்றாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், தொழிலாளர் விரோத மோடி அரசை தூக்கி எறிவோம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம், அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் தேர்தல் களத்தில் ஒருங்கிணைந்து நிற்போம். தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்

வாக்குப்பதிவு எந்திரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது. வாக்குப்பதிவு குறித்து தேர்தல் அன்று ஒரு சதவிகிதமும் சில நாட்கள் கழித்து வேறு சதவீதமும் அறிவிக்கிறது. 11 நாட்கள் கழித்து வாக்கு பதிவு சதவீதத்தை மாற்றி அறிவித்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் இதனை தெளிவுபடுத்த வேண்டும், அறிவியல் பூர்வமாக இதில் எந்த மாறுபாடும் இல்லை என்று உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.