நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை!

நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகம் என கூறப்பட்ட நிலையில் தற்போது கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

நாகை – இலங்கை இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. கேரளாவை சேர்ந்த செரியாபானி என்ற கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை துறைமுகத்துக்கு இயக்கப்பட்டது. ஆனால் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதிக பயணக்கட்டணம், விசா கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் போதி வரவேற்பு இல்லை என இந்த கப்பல் சேவை தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் மே 13 ஆம் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து நாகையில், நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் நத்த கோபாலன் இதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சிவகங்கை என்ற பெயருடன் வரும் கப்பல் 13ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படுகிறது என கூறினார்.

இந்த கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும் என்றும் அவர் கூறினார். மேலும் அங்கிருந்து 2 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு மாலை 6 மணிக்கு கப்பல் வந்தடையும் என்றும் கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் http://www.sailindsri.com என்ற இணைய தளம் முகவரி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். அல்லது md@indsri.ferry.co.in என்ற தளத்திலும் முன்பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார். கப்பலில் பயணம் செய்ய கட்டணம் ரூ.4 ஆயிரத்து 800 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் 60 கிலோ வரை எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாஸ்போர்ட் அவசியம் வேண்டும் என்றும் இந்திய நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு விசா தேவையில்லை என்றும் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் நத்த கோபாலன் தெரிவித்தார். ஆனால் இடிஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். கப்பலில் பயணம் செய்வோர் மது அருந்தவும், புகைபிடிக்கவும் அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போது பள்ளிக் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை – இலங்கை இடையேயான கப்பல் பயணத்திற்கு கட்டணமும் குறைவு, விசாவும் தேவையில்லை என்பதால் அதிகளவு பயணிகள் இம்முறை கப்பல் சேவையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.