பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல்: குமாரசாமி!

பாலியல் புகாருக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணாவின் விடியோக்கள் அடங்கிய 25 ஆயிரம் பென்டிரைவ்களை வாக்குப்பதிவுக்கு முன்பு விநியோகித்ததாக சித்தராமையா மீது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் காவல் துறையினரை கட்டாயப்படுத்தி விடியோக்கள் அடங்கிய பென்டிரைவ்களை விநியோகித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தேவெ கெளடாவின் மகன் ரேவண்ணா மற்றும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் பணிபுரிந்த பெண்ணுக்கு பிரஜ்வல் பாலியல் தொல்லை கொடுத்ததாக, காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

காவல் துறையினரை கட்டாயப்படுத்தி பிரஜ்வல் பாலியல் விடியோக்களை ஆளும் கட்சியினர் பரப்பியுள்ளனர். பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.கே. சுரேஷ் (துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரர்) அத்தொகுதி முழுவதும் பிரஜ்வல் விடியோக்களை பரப்பியுள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி இச்சம்பவம் நடத்தது. இதனையடுத்து ஏப்ரல் 22ஆம் தேதி எங்கள் வாக்குச்சாவடி முகவர் பூர்ண சந்திரா, ஹாசன் மாவட்ட துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடியோக்களை ஏப்ரல் 21ஆம் தேதி இரவு 8 மணியளவில் வாட்ஸ் ஆப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதனை பகிர்வதற்கு நேரக்கெடுவும் (கவுன்டவுன்) விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் சேனலுக்கு நபர்களை சேர்க்கக்கோரிய நவீன் கெளடா, கார்த்திக் கெளடா (ரேவண்ணாவின் ஓட்டுநர்), சேத்தன், புட்ட ராஜு என்னும் புட்டி உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாரேனும் சமூகவலைதளத்தில் பெண்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல் துறை, இந்த 5 பேரின் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தோல்வியடைவார்கள் என உறுதிபடக் கூறுகிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி செளத்ரி, பிரஜ்வல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என ஏப்ரல் 24ஆம் தேதி கோரிக்கை வைக்கிறார். அன்றைய தினமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க முதல்வர் சித்தராமையா உத்தரவிடுகிறார். இது சிறப்பு புலனாய்வுக் குழு அல்ல. சித்தராமையா புலனாய்வுக் குழு அல்லது (டி.கே. சிவகுமார்) சிவகுமார் புலனாய்வுக் குழு.

பென்டிரைவ்களையும் விடியோக்களையும் பரப்புவதற்கு மூலகாரணமாய் இருந்த கார்த்திக் கெளடாவை காவல் துறையினர் கைது செய்து மக்கள் முன்பு நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பதை விட, சிலரைக் களங்கப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே விசாரணையின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு குமாரசாமி பேசினார்.