ராஜஸ்தானில் 120 மாணவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட நீட் தேர்வு!

ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை எனப்படும் என்டிஏ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 -2025-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு 23 லட்சம் மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கிடையே, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. காட்டுத்தீ போல பரவிய இந்த தகவல் நீட் தேர்வு எழுதியவர்க்ளுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது. ஆனால், இதை தொடர்ந்து நீட் நுழைவு தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும், தேசிய தேர்வு முகமை இதனை திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குனர் சாதனா பராசர் கூறியதாவது:-

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் முற்றிலும் ஆதாரம் இல்லாதது. எவ்வித அடிப்படையும் இல்லாதது” இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே, ராஜஸ்தானில் உள்ள ஸ்வாய் மதோபோரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறு தேர்வு நடத்தப்பட்டது:இது குறித்து விளக்கம் அளித்து சாதனா பராசர் கூறியதாவது:- ”

ராஜஸ்தானில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது. இதனால், சில தேர்வர்கள் வினாத்தாளுடன் தேர்வு அறையை விட்டு வெளியே வந்தனர். எனினும், நீட் தேர்வின் நேர்மையில் எந்த சமரசமும் நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது” என்றார்.

ராஜஸ்தானில் குறிப்பிட்ட அந்த தேர்வு மையத்தில், தாங்கள் தேர்வு செய்த மீடியத்திற்கு பதிலாக வேறு மொழியில் வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே மாணவர்கள் வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தேசிய தேர்வு முகமையின் வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக சதனா பரசார் கூறிய போது, ராஜஸ்தானில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு மையத்தில் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டது. தேர்வு கண்காணிப்பாளர் எவ்வளவோ முயற்சித்தும் சில தேர்வர்கள் அறையை விட்டு வெளியே வந்து விட்டனர். அனைத்து தேர்வர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், தேசிய தேர்வு முகமை உறுதியாக உள்ளது” என்றார்.