ஆப்கானிஸ்தான் நாட்டில் பேய் மழையால் 300க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்கு கடுமையான வெள்ளமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடுமையான மழையும் அதனால் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த மழை மற்றும் வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவலமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காணாமலும் போயிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்லான், தாகர் மற்றும் பதக்ஷன் ஆகிய வடக்கு மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பக்லான் மாகாணத்தில் மட்டுமே இந்த மழை வெள்ளத்தினால் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஐ. நாவின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும் பக்லானி ஜெயித் பகுதியில் சுமார் 1,500க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கிறதாக ஐ. நாவின் அவசரகால மீட்பு அமைப்பு தலைவர் முகமது பஹிம் தெரிவித்து இருக்கிறார். எனினும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் அரசனது கடந்த வெள்ளிக்கிழமைவரை 62 பேர் இறந்ததாக கூறியிருந்தது. மேலும் தாலிபன் உள்துறை அமைச்சகம் இந்த மழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த மழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து அந்நாட்டில் இருக்கும் ஐநாவின் தகவல் தொடர்பு அதிகாரியான ரானா டெராஸ் கூறியிருக்கிறார். பக்லான் மாகாணத்தில் இந்த மழை வெள்ளத்தினால் சுமார் 311 பேர் பலியாகி இருக்கிறார்கள். 2,011 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. மேலும் 2,800 வீடுகள் சேதமடைந்து இருக்கிறது என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்து இருக்கிறது. குறிப்பாக அந்நாட்டின் வடக்கு பகுதிகளில் இருக்கும் மாகாணங்கள் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால மீட்பு பணியாளர்கள் அனுப்பப்பட்டு அங்கு மீட்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகால போரினால் பேரழிவுக்குள்ளான ஆப்கானிஸ்தான் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் கடுமையான மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகி இருக்கிறது ஆப்கானிஸ்தான்.