வங்கதேசத்தில் இருந்து புதிய கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சி: ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தில் இருந்து தனியாக ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அதற்கு அனுமதி அளிக்காததால் தனது அரசுக்குத் தொடர்ந்து தொல்லை தந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வங்கதேசத்தில் தேர்தல் நடந்த நிலையில், அதில் ஹசீனா ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார். இருப்பினும், இந்தத் தேர்தலை வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு முன்பு தனக்கு அழுத்தம் தரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதாவது வங்கதேசப் பகுதியில் விமானப்படைத் தளம் அமைக்க வெளிநாடு ஒன்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். விமானப்படைத் தளம் அமைக்க அனுமதி தந்தால் தேர்தலில் வெல்ல உதவுவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட நாடு வங்கதேசத்தில் விமானப் படைத் தளம் அமைக்க விரும்பியது. அதற்கு நான் அனுமதித்திருந்தால், எனக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது” என்றார். எந்த நாடு என்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.. இருப்பினும், வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்ததாக மட்டும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் பேசுவதைப் பார்க்கும் போது ஏதோ எங்கள் நாட்டில் மட்டும் விமானப் படைத் தளத்தை அமைக்க முயல்வது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. ஆனால், உண்மை அதுவல்ல.. அவர்கள் வேறு சில நாடுகளிலும் விமானப் படைத் தளத்தை அமைக்க முயன்றனர். அவர்களுக்கு நான் அனுமதி தரவில்லை என்பதாலேயே எனது அரசுக்குத் தொடர்ந்து தொல்லை தருகிறார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை” என்றார்.

அந்த நபர் விமானப் படை அமைக்க வேண்டும் எனக் கேட்ட போது அதற்கு என்ன பதில் சொன்னீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் வங்கதேசத்தின் தேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள். இந்த நாட்டை விற்று அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை.. மக்கள் விரும்பினால் நான் ஆட்சியில் இருப்பேன். மக்கள் விரும்பவில்லை என்றால் என்னால் பிரதமராக இருக்க முடியாது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் வர்த்தகம் நடக்க வங்கதேசம் மிக முக்கியமான இடம்.. இதன் காரணமாகவே வங்கதேசத்தின் மீது பலரது பார்வையும் இருக்கிறது. இருப்பினும், வங்கதேசத்தில் நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன். இப்படி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து வங்கதேசத்திற்காகப் போராடி வருகிறேன். அதேநேரம் வங்கதேசத்தில் இருந்து ஒரு புதிய நாட்டை உருவாக்கும் சதி இன்னும் தொடர்ந்தே வருகிறது. கிழக்கு திமோரை (தெற்காசிய நாடு) போல.. வங்கதேசத்தில் இருந்து தனியாக ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயல்கிறார்கள்.. வங்கதேசத்தின் சட்டோகிராம் மற்றும் மியான்மரின் சில பகுதிகளைச் சேர்த்து ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சிகள் நடக்கிறது. அதை நான் அனுமதிக்காததால் எனது அரசைக் கவிழ்க்கச் சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். எந்த முயற்சியும் வெற்றியைத் தரவில்லை என்றால் அவர்கள் எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் போல என்னையும் படுகொலை செய்துவிடுவார்கள். ஆனால், அதைக் கண்டு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன். எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டேன்” என்றார்.