போலியான வாக்குக் கணிப்புகளை வெளியிட்டதால் பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, வாக்குக் கணிப்பு வெளியானதற்கு பிறகு பங்குச் சந்தைகளில் 3.39 சதவீதம் உயர்வு கண்டன. அதேவேளையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் பங்குச் சந்தைகள் 6 சதவீதம் சரிவு கண்டன. இதனால், பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் பணம் சம்பாதிக்க பிரதமரும் உள்துறை அமைச்சரும் உதவியிருக்கிறாக்ரள். பங்குச் சந்தை உயர்வு குறித்து ஏன் மோடி வெளிப்படையாக பேச வேண்டும். பாஜகவினருக்கு பங்குச் சந்தை குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக் கணிப்பை திணித்துள்ளனர்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. அது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும். போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும். பொறுப்புள்ள இடத்தில் அமர்ந்துகொண்டு போலியான கணக்கைக் காட்டியுள்ளனர். மோடி, அமித் ஷாவின் பேச்சால், பங்குச் சந்தையில் அதிக முதலீடு நடந்துள்ளது. வாக்குக் கணிப்பு வெளியானதற்கு மறுநாள், பங்குச் சந்தைகள் 3.39 சதவீதம் உயர்ந்தன. பங்குச் சந்தைகளில் ஊழல் நடந்திருக்கிறது என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
