குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 தமிழர்கள் உட்பட 40 பேர் உடல் கருகி பலியாகி உள்ளனர். கேரளாவைச் சேர்ந்த இருவரும் இந்த தீ விபத்தில் சிக்கி பலியாகி இருக்கின்றனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்கஃப் நகரத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணிக்கு 6 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடமானது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்குச் சொந்தமானது. இந்த கட்டிடத்தில் பற்றிய தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் மாடிகளில் தங்கியிருந்தவர் தீயில் சிக்கியும் மூச்சுவிட முடியாமலும் திணறினர். இத்தீவிபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 40 பேர் கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் தமிழர்கள்; 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுடன் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாமை உடனடியாக கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தீ விபத்து நிகழ்ந்த இடத்தை துணை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் ஆளுநர்களும் உடன் சென்றிருந்தனர்.