கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி நேற்று செலுத்தப்பட்டது. இதனை கண்டித்து இந்தியா பதிலடி கொடுத்தது.
கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாரா அருகே மர்ம நபர் களால் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது என்றும் அபத்தம் என்றும் இந்தியா மறுத்துவிட்டது. இதனால், இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக நேற்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதற்கு பதிலடியாக, 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 329 அப்பாவிகள் நினைவாக மவுன அஞ்சலி கூட்டம் நடத்தப்போவதாக கனடா நாட்டின் இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது. இது குறித்து வான்கூவரில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீவிரவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து நாடுகளுடன் நெருக்க மாக இந்தியா பணியாற்றி வருகிறது. கடந்த 1985-ம் ஆண்டில் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததன் 39-வது ஆண்டு நினைவு நாள் ஜூன் 23-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த விபத்தில், 86 குழந்தைகள் உட்பட 329 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவில் விமான வரலாற்றில், கொடூரமான தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் நினைவாக ஸ்டான்லி பூங்காவில் உள்ள செபர்லே விளையாட்டு திடலில் ஏர் இந்தியா நினைவிடத்தில் 23-ம் தேதி மாலை 6:30 மணிக்கு மவுன அஞ்சலி கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் கூட்டாக இணைந்து கலந்து கொள்வதன் வழியாக தீவிரவாதத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.