“பிரிட்டனில் மாற்றம் இப்போது தொடங்குகிறது என்றும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்குவோம்” என்றும் லேபர் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி அருதிப் பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றிய கீர் ஸ்டார்மர் கூறியதாவது:-
தேர்தல் வெற்றியின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு அதன் எதிர்காலத்தைப் பெறுகிறது. மக்கள் மத்தியில் ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை நாம்தான் செய்தோம். இதற்காக நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள், போராடினீர்கள், வாக்களித்தீர்கள். இப்போது மாற்றம் வந்துவிட்டது. நீங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள். நேர்மையாகச் சொல்வதானால் இது மிக நல்ல விஷயம். உங்களின் கடின உழைப்புக்கு நன்றி. கட்சியை மறுசீரமைக்கவும், அதன் மீது புதிய தோற்றத்தை ஏற்படுத்தவும் ஏறக்குறைய ஐந்து வருடங்களாக நாம் பாடுபட்டுள்ளோம்.
இந்த வெற்றி நாம் ரசிப்பதற்கானது. அதேநேரத்தில் நம் முன்னால் சவால்கள் காத்திருக்கின்றன. நாட்டை புதுப்பிக்கும் பணி நம் முன் உள்ளது. பிரிட்டனை மீட்டெடுக்க நாம் தயாராக இருக்கிறோம். நாட்டின் மீதிருந்த ஒரு சுமை நீங்கிவிட்டது. ஆம், இறுதியாக அந்த சுமை நீக்கப்பட்டுவிட்டது. இந்த பெரிய தேசத்தின் புதிய விடியல் தற்போது தோன்றி இருக்கிறது. இனி நாம் நம்பிக்கையின் ஒளியுடன் நடக்கலாம். நாட்டு மக்கள் நமக்கு ஆணையிட்டுள்ளார்கள். இந்த ஆணை, ஒரு பெரிய பொறுப்புடன் வந்திருக்கிறது. இன்றுமுதல் நாம் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம். மாற்றத்திற்கான வேலையைத் தொடங்குவோம். அரசியல் என்றால் அது பொது சேவை செய்வதற்கானது என்ற நிலையை மீண்டும் நாம் உருவாக்குவோம். நமது அரசு நன்மைக்கான சக்தியாக இருக்கும் என்பதை நாம் காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.