பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் பிடிஐ கட்சி முடக்கம்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் கட்சியான ‘பாகிஸ்தான் டெர்ஹீக்-இ-இன்சாப்’ (பிடிஐ)-ஐ தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி என அரசியல் பேரிடரிலும் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. இதிலிருந்து நாடு மீள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என தேர்தல் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 854 தொகுதிகளில் நாடாளுமன்ற மற்றும் மாகாண தேர்தல் நடந்தது. இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 91 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவராவார்கள். கட்சியின் கிரிக்கெட் பேட் சின்னம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சுயேச்சையாக களமிறங்கியிருந்தனர்.

அதேபோல நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி 71 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதனையடுத்து இம்ரான் கான் தன்னுடைய ஆதரவாளர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதாக ஒதுங்கிக்கொண்டார். எனவே, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இம்ரான்கானின் பிடிஐ கட்சியை தடை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அட்டா தரரின் கூறியிருக்கிறார். பிடிஐ கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பிரதமராக பதவி வகித்து வந்தபோது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் முக்கியமானதுதான் தோஷகானா வழக்கு. அதாவது, இவர் பிரதமராக இருந்த காலத்தில் இவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் அரசின் தோஷகானா எனும் கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இம்ரான் கான் இதனை கஜானாவில் சேர்க்காமல் சட்டவிரோதமாக விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை தனது சொந்த நோக்கங்களுக்காக செலவு செய்திருக்கிறார். கோடிக்கணக்கில் இப்படியாக பணம் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதை எதிர்த்து அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இம்ரான் கானுக்கு எதிராக புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது இம்ரான் கான் சிறையில் இருக்கிறார். இப்படி இருக்கையில்தான் அவரது கட்சியை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்கு தற்போதைய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தற்போதைய அரசு தெரிவித்திருக்கிறது.