ஹமாஸ் தலைவர் தங்கிய கட்டிடத்தில் பல மாதங்களுக்கு முன்பே குண்டு வைத்தது அம்பலம்!

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் பல மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு, ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவர் ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சமீபத்தில் ஈரான் சென்றிருந்தார். விழாவில் பங்கேற்ற பிறகு, வடக்கு டெஹ்ரானில் ஈரான் ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள ‘நெசாத்’ என்ற விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். ஈரான் வரும்போது, இவர் இங்குதான் தங்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த 31-ம் தேதி நடந்த தாக்குதலில் இஸ்மாயில் மற்றும் அவரது மெய்க்காப்பாளர் உயிரிழந்தனர். இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இஸ்மாயில் கொல்லப்பட்டார் என ஹமாஸ் முதலில் அறிவித்தது. ‘விருந்தினரை எங்கள் மண்ணில் கொன்ற இஸ்ரேலை பழிவாங்குவோம்’ என ஈரானும் அறிவித்தது.

இந்நிலையில், தாக்குதல் நடந்த விருந்தினர் மாளிகையை 2 ஈரான் அதிகாரிகள், ஒரு அமெரிக்க அதிகாரி உட்பட மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 7 அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர். விருந்தினர் மாளிகையின் படுக்கை அறையில் ஏற்கெனவே மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இஸ்மாயில் இந்த அறையில் தங்கியது உறுதி செய்யப்பட்டவுடன், ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் இதை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிநவீன வெடிகுண்டு என்றும் கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு பல மாதங்களுக்கு முன்பே, விருந்தினர் மாளிகைக்குள் கொண்டு செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இஸ்மாயில் படுகொலை தொடர்பாக துருக்கி ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின. இஸ்ரேல் உளவுப் பிரிவான ‘மொசாத்’ அமைப்பை சேர்ந்தவர் படுகொலையை அரங்கேற்றியதாக அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஏஜென்ட் அமித் நாகேஷ் என்பவர் இந்த சதி செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ‘அமிட்னாகேஷ்’ என்றால் ஹீப்ரு மொழியில் கொலைகாரர் என அர்த்தம் என தெரியவந்ததும், மேலே கூறப்பட்ட பதிவு அழிக்கப்பட்டது.