வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல்: எதிக்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

வக்பு வாரிய நிர்வாகக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமனம், பெண்களுக்கு பிரதிநிதித்துவம், வக்பு வாரியம் உரிமை கோரும் சொத்துகளை ஆய்வு செய்ய நிர்வாகக் குழு உள்ளிட்டவை இந்த சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி இருக்கின்றனர். இந்த நிலம்தான் வக்பு வாரிய சொத்துகள் எனப்படுகின்றன. இதற்காக 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. 1958-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்களும் அமைக்கப்பட்டன. வக்பு வாரியங்களானவை, மசூதிகள்- மத்ரஸாக்கள், தர்காக்களை நிர்வகிக்கும் நிர்வாக முறைகளைக் கண்காணிக்கும்; இந்த வழிபாட்டு தலங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துகளைக் கண்காணிக்கும். வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான விரிவான சட்டம் 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திலும் 2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதனடிப்படையில்தான் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 70,000 வக்பு வாரிய சொத்துகள் உள்ளன. அதாவது 2 லட்சம் ஏக்கர் அளவுக்கு வக்பு வாரிய சொத்துகள் இருக்கின்றன. மசூதிகள் உள்ளிட்ட 7 ஆயிரத்துக்கும் அதிகமான வக்ப் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இவற்றை தமிழ்நாடு வக்ப் வாரியம் கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதே முறையில்தான் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது. தற்போது 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வருகிறது. குறிப்பாக வக்பு வாரியம் உரிமை கோரும் சொத்துகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்படும்; வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரும் உறுப்பினராக இடம் பெறுதல்; வக்பு வாரியத்தில் கணிசமான அளவு முஸ்லிம் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் இடம் பெற உள்ளனவாம்.

மத்திய அரசின் இந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் வெளியிட்டிருந்த அறிக்கையில், வக்பு சட்டம் 1995இல் 40 திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும், அதுவும் வக்பு சொத்துகளை பாதுகாப்பது, பராமரிப்பது தொடர்பில்தான் அந்தத் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது. அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி, சட்டத்தின் துணையோடு வக்பு சொத்துகளை வளைத்துக் கொள்வதற்கு யார் முனைந்தாலும் அந்த சட்டத் திருத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வக்பு சட்டங்களை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சித்தால் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அந்த முயற்சியைத் தோற்கடிக்கக்கூடிய வகையிலான வேலைகளை – நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படாமல் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்திருந்தார்.

மேலும் இது மத சுதந்திரத்துக்கு எதிரான மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசியும் கடும் எதிர்ப்பு தெரிவித்த்இருந்தார். இந்த நிலையில் லோக்சபாவில் இன்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.