ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக் கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான மசோதாவை அறிவித்துள்ளது.
ஈராக் நாட்டின் தனிநபர் சட்டத்தின்படி பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை திருத்தும் முயற்சியில் நீதி அமைச்சகம் புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இது 9 வயது சிறுமிகளுக்கும் 15 வயதுள்ள ஆண் குழந்தைகளுக்கும் திருமணத்தை அனுமதிக்கிறது.
இஸ்லாமிய மதச்சட்டத்தை தரப்படுத்தவும் தகாத உறவுகளிலிருந்து இளம் பெண்களை பாதுகாக்கவும் திருமண வயது குறித்த புதிய மசோதா முயல்வதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த மசோதா குழந்தை திருமணத்தை ஊக்குவிக்கும் என்றும்; குடும்ப விவகாரங்களில் நீதிமன்ற அதிகாரத்தை குறைத்து மதகுருமார்களின் கைஓங்கச் செய்யும் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும்விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்று ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல், குடும்ப வன்முறை அதிகரிக்கும் ஆபத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.