பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலி!

பிரேஸில் விமான விபத்தில் 61 பேர் பலியான நிலையில், தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டு, ஒரு பயணி உயிர் தப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேஸில் நாட்டில் 62 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு விழுந்து விபத்துக்குள்ளானதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், 61 பேர் பலியானதாகவும், ஒரு பயணி தாமதமாக வந்ததால் விமானத்தில் ஏற்ற மறுக்கப்பட்டு, தற்போது உயிரோடு இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

பிரேஸில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர். இதில் 57 பேர் பயணிகள், 4 பேர் விமான ஊழியர்கள். இதில், ஏறி பயணித்து, உயிரிழந்திருக்க வேண்டிய ஆட்ரியானோ என்ற பயணி, விமான நிலையத்தில் ஏற்பட்ட சிறு குளறுபடியால், தான் தாமதமாக வந்ததாகவும், அதனால், விமானத்தில் ஏற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறிவிட்டதாகவும், இல்லையென்றால், அந்த விமானத்தில் சென்று மரணமடைந்திருப்பேன் என்றும் ஒரு கெட்ட கனவை கண்டு விழித்தவர் போல கூறுகிறார்.

உள்ளூர் மருத்துவமனையில் பணியாற்றும் ஆட்ரியானோ, தனது பணியை முடித்துவிட்டுக் கிளம்ப தாமதமாகியிருக்கிறது. தான் விமான நிலையத்தின் செக்-இன் மையத்துக்கு காலை 9.40க்கு வந்தேன். ஆனால், காஸ்காவெல் – குவாருல்ஹோஸ் செல்லும் இரண்டு மணி நேர விமானத்தில் ஏற்ற மறுத்துவிட்டார்கள். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நபருக்குக் கிடைத்த தகவலால் அதிர்ச்சி அடைவதோ, மகிழ்ச்சி அடைவதா என்றே புரியவில்லை.

இதுபற்றி அவர் கூறுகையில், எப்போதும் விமான நிலைய நுழைவாயிலில் யாராவது இருப்பார்கள். நான் வந்த போது யாருமே இல்லை. கேட்டை யாராவது திறப்பார்கள் என்று காத்திருந்தேன். ஆனால் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. அங்கே ஒருவர் வந்தார், அவரிடம் நான் உள்ளே அனுமதிக்குமாறு வாதாடினேன். ஆனால், அவர் என்னை அனுமதிக்கவே இல்லை. பிறகு தான் எனக்கு நான் செல்ல வேண்டிய விமானம் விபத்துக்குள்ளாகி, அனைவருமே உயிரிழந்த தகவல் கிடைத்தது. அங்கு, என்னை அனுமதிக்காமல் அவரது வேலையை சரியாகச் செய்தவரை ஓடிச்சென்று கட்டிக்கொண்டேன். அவர் வேலையை செய்யாமல் போயிருந்தால், உங்களிடம் நான் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் என்கிறார் சிரித்தபடி. இதை நம்ப முடியவில்லை என்று விடியோவை பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

சா பாலோ சா்வதேச விமான நிலையமான குவாருல்ஹோஸுக்கு, ஆட்ரியானோ இல்லாமல் 57 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளா்களுடன் சென்ற தங்களின் விமானம் விபத்துக்குள்ளானதாக வோபாஸ் நிறுவனம் இந்திய நேரப்படி நேற்று இரவு அறிவித்திருந்தது.

வின்ஹீடோ நகா்ப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் கீழே விழுந்ததாக அந்த நகரின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை குழுக்கள் விரைந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்பு பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் புகை வெளியாவதைப் போன்ற விடியோ காட்சிகள் பிரேஸில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. மேலும், பறந்துகொண்டிருந்த விமானம் நிலைதடுமாறி செங்குத்தாக தரையில் விழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.