காசாவில் போர்நிறுத்ததிற்கு இதுவே கடைசி வாய்ப்பு: அமெரிக்கா!

காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் படைக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூண்ட போர், 10 மாதங்களைக் கடந்தும் தொடருகிறது. காசாவில் போர்நிறுத்தம் ஏற்பட கத்தாரில் கடந்த வாரம் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை, உடன்பாடு எட்டப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவர்த்தை இந்த வாரம் மீண்டும் நடைபெற உள்ளது. அதில் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்பதை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

காசாவில் நடைபெறும் போர் மத்திய கிழக்குப் பகுதிகளின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் பேராபத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் – ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. காசா போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க உள்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் 9-ஆவது முறையாக மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று திங்கள்கிழமை(ஆக. 19) இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், அந்நாட்டின் அதிபர் ஐசாக் ஹர்ஸோக் உடன் அவர் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட இதுவே கடைசி வாய்ப்பு என்ற எச்சரிக்கையை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், “பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களை தாயகம் அழைத்து வரவும், போர்நிறுத்தம் ஏற்படுத்திடவும், அமைதியும் பாதுகாப்பும் நிலைத்திடும் வகையில் ஒவ்வொருவரையும் சிறந்த பாதையில் நிலைநிறுத்திடவும் இதுவே ஒரு மிகச்சிறந்த தருணம்” என்று பேசியுள்ளார்.