அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு ஒத்துழைப்பு, உலகளாவிய சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
நான்கு நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஆக.22) அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். இதனையடுத்து, வாஷிங்டனில் உள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறையை பார்வையிட்டு, உயிர்நீத்த பெயர் தெரியாத ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினா். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாட் ஆஸ்டினை நேற்று (ஆக.23) சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனை ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 24) சந்தித்தார். புவிசார் அரசியல் நிலைமை, முக்கிய பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.
வாஷிங்டனில், அமெரிக்க இந்திய உத்திசார் ஒத்துழைப்பு மன்றம் ஏற்பாடு செய்திருந்த வட்ட மேஜை மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்புத் தொழில் துறையின் மூத்த பிரதிநிதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். இந்த வட்டமேஜை மாநாட்டில் பல்வேறு அமெரிக்க பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டன.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “அமெரிக்க முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை இந்தியா வரவேற்கிறது. திறமையான மனித வளம், வலுவான அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஆதரவான சூழல் அமைப்பு, பெரிய உள்நாட்டு சந்தை ஆகியவை இந்தியாவில் உள்ளன. வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய திறன், நீடித்த தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பணியாற்ற இந்தியா விரும்புகிறது” என்று தெரிவித்தார்.