வடகொரியாவில் கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை: கிம் ஜாங் உன் உத்தரவு!

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்கத் தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வட ஃபியோங்கன் மாகாணத்தின் வடக்கு எல்லை நகரமான சினுய்ஜு மற்றும் உய்ஜு கவுண்டியில் பெய்த கனமழையால் 4,100 வீடுகள், 7,410 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பல பொது கட்டிடங்கள், கட்டமைப்புகள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை சுமார் 1000ஐ தாண்டும் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில், கிம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க உய்ஜு மாவட்டத்திற்குச் சென்று ஆதரவை வழங்கினார். அப்போது பேசிய கிம் ஜாங் உன் அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கியுள்ளது. இந்த வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தென்கொரியாவின் சோசன் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் வட கொரியா தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

முன்னதாக வட கொரிய வெள்ளத்தில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை மறுத்த அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவின் கடுமையான வெள்ள சேதம் குறித்த தென் கொரிய ஊடகங்களின் அறிக்கைகள் “கட்டமைக்கப்பட்டவை” மற்றும் “அரசியல் நோக்கத்துடன் தவறான பிரச்சாரம்” என்று அவர் கண்டித்தார். சீனா, ரஷ்யா மற்றும் தென் கொரியாவில் இருந்தும் வடகொரியாவுக்கு உதவி அளிக்கப்பட்ட போதிலும், கிம் உதவ மறுத்துவிட்டார். மழை சேத மீட்புக்கு உதவி வழங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நன்றி தெரிவித்த கிம், தேவைப்படும்போது உதவியை நாடுவேன் என்றும் தெரிவித்தார். வடகொரியா அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே நிறுவப்பட்ட திட்டத்தின் படி மறுவாழ்வு பணிகளை தொடர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.