அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் காத்மாண்டு உருக்குலைந்து காணப்படுகிறது.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 204 பேர் பலியானதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 33 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமெனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் (செப்.30) தொடருந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் காத்மாண்டுவில் நூற்றுக்கணக்கான மக்கள் உணவு, பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமலும், சுகாதார வசதிகளின்றியும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிலச்சரிவுகளால் காத்மாண்டுவை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் காத்மாண்டுவுக்கு செல்லும் உணவு உள்பட உணவுப் பொருள்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக, காய்கறிகள் உள்பட உணவுப் பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
காத்மாண்டுவின் முக்கிய நீராதாரமான பாகமதி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனிடையே, கடந்த 3 நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் நேபாளத்தில் 20 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இதன்காரணமாக, 1,100 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காத்மாண்டுவிலும் பிற பகுதிகளிலும் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேபாள பிரதமர் பிரகாஷ் மான் சிங் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(செப். 29) நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உள்பட பாதுகாப்புப் படைகள் அனைத்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 4,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்துள்ளோருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், உணவு உள்பட அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.