பிரிட்டன் வீரரை கைது செய்த ரஷ்யா: திடீர் பதற்றம்!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு வீரரை ரஷ்யா இப்போது கைது செய்துள்ளது. இந்த போரில் மேற்குலக நாடுகளைச் சேர்ந்த ஒரு வீரரை ரஷ்யா கைது செய்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேற்குலக நாடுகள் தங்களின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி தந்துள்ள நிலையில், அதை வைத்து உக்ரைன் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. இதற்குப் பதிலடியாக ரஷ்யாவும் தனது அதிநவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்கி வருகிறது. இதனால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

இதற்கிடையே திடீர் திருப்பமாக உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரை ரஷ்யப் படைகள் பிடித்துள்ளது. அங்கு அந்த நபர் உக்ரைன் நாட்டவருடன் இணைந்து சண்டையிட்டுக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த அந்த நபரின் பெயர் ஜேம்ஸ் ஸ்காட் ரைஸ் ஆண்டர்சன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் சுமார் 4 ஆண்டுகள் பிரிட்டன் ராணுவத்தில் சிக்னல் மேனாக வேலை செய்த ஜேம்ஸ், உக்ரைனின் சர்வதேச படையில் சேர்ந்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் 2022ல் வெடித்த நிலையில், அப்போது தான் அவர் உக்ரைனின் சர்வதேச படையில் சேர்ந்துள்ளார். உக்ரைனின் சர்வதேச படை என்பது ரஷ்யாவுக்கு எதிராகப் போராட விரும்பும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இருக்கும் ஒரு ராணுவ பிரிவாகும். ஜேம்ஸ் கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த பிரிவில் வேலை செய்து வந்துள்ளார்.

முதலில் இவர் உக்ரைன் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் டிரைனராகவே வேலை செய்துள்ளார். இவரை சில மாதங்களுக்கு முன்பு தான் நேரடியாகப் போரில் ஈடுபடு குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளனர். குர்ஸ்க் பிராந்தியத்தில் நேரடியாகப் போரிட விரும்பவில்லை என்று ஜேம்ஸ் சொன்ன போதிலும் அதைக் கண்டுகொள்ளாமல் உக்ரைன் ராணுவம் தன்னை இங்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். உக்ரைன் நாட்டிற்காகப் போராடும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்த ஒரு வீரரை ரஷ்யா கைது செய்வது இதுவே முதல்முறையாகும்.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் கூறவில்லை. அதேநேரம் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரை ரஷ்யா கைது செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளதைத் தொடர்ந்து அந்த நபரின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்யப் போவதாக மாஸ்கோவில் உள்ள பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவால் கைது செய்யப்பட்ட அந்த வீரரின் தந்தை ஸ்காட் ஆண்டர்சன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், “உக்ரைன் நாட்டை சேர்ந்த தளபதி எனக்குக் கால் செய்தார். எனது மகனை ரஷ்ய ராணுவம் பிடித்துச் சென்றதாகக் கூறினார். எனது மகன் முதலில் பிரிட்டிஷ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறான். உக்ரைன் ராணுவத்தில் சேரும் முன்பு இங்கு போலீஸில் பணியாற்றினான். உக்ரைன் ராணுவத்தில் சேரப் போவதாக முதலில் சொன்ன போது வேண்டாம் என எவ்வளவோ சொன்னேன். ஆனால், அவன் கேட்கவில்லை. இப்போது அவனுக்கு என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது” என்றார்.