வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவாமி லீக்கின் எக்ஸ் பதிவில் ஷேக் ஹசீனா, “சனாதன மத சமூகத்தின் உயர்மட்ட தலைவர் ஒருவர் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சிட்டகாங்கில் ஒரு கோயில் எரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள், மடங்கள் மற்றும் அகமதியா சமூகத்தினரின் வீடுகள் தாக்கப்பட்டன, சேதப்படுத்தப்பட்டன, சூறையாடப்பட்டன, தீவைக்கப்பட்டன. மத சுதந்திரத்துக்கும், அனைத்து சமூக மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ், தேச விரோத சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து வங்கதேசத்திலும் இந்தியாவிலும் தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.

இது தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “எந்த மதமும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். இது வேறு ஒரு நாட்டின் விவகாரம். எனவே, இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் நாங்கள் அவர்களுடன் (மத்திய அரசு) இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

இந்நிலையில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நடந்த பரவலான போராட்டங்களை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அவர் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற திரு.யூனுஸ் பொறுப்பேற்றார். யூனுஸ் பொறுப்பேற்ற பிறகும், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டுழியங்கள் தொடர்வதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. வங்கதேசத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெற்று வருவதாக செய்திகளும் உள்ளன.