கனடா நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து அதன் இறக்கை பாதிப்படைந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஏர் கனடா நிறுவனத்தின் விமானம் (எண் 2259) கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் தீவின் செயின்ட் ஜான் நகரில் இருந்து ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்திற்கு நேற்று சென்றது. கனடா நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் தரையிறங்கும் நேரத்தில் சக்கரம் ஒன்று பழுதானதால் 20 டிகிரி இடதுபுறம் சாய்ந்த கோணத்தில் விமானத்தின் இறக்கை தரையில் உரசியபடி தீப்பிடித்துள்ளது. இந்த விபத்து காரணமாக அதிக சத்தம் எழும்பியதால் பயணிகள் உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரம் வரை விமானம் தரையில் இறக்கையை உரசியபடியே சென்றதால் தீப்பிடித்து விமானம் பாதிப்புக்குள்ளாகுமோ என பயணிகள் அச்சமடைந்தனர். ஆனால், விமானம் நின்றவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். காயமடைந்த சில பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
விமானத்தில் எத்தனைப் பயணிகள் இருந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பின் விமான ஓடுதளம் மீண்டும் திறக்கப்பட்டது.