புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்!

உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் எலான் மஸ்க். இதையடுத்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன்துறை (டிஓஜிஇ) தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், உள்நாட்டு செலவினம், வரி குறைப்பு தொடர்பான மசோதாவை ட்ரம்ப் கொண்டு வந்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, புதிய கட்சி தொடங்குவது குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில், ‘அமெரிக்கா பார்ட்டி’ எனும் புதிய கட்சியை எலான் மஸ்க் 5-ம் தேதி தொடங்கியுள்ளார். ‘2 கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப் போக்கை முறியடிப்போம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எலான் மஸ்க், தனது கட்சியின் பொருளாளராக வைபவ் தனேஜாவை நியமனம் செய்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். எலான் மஸ்க்கின் `டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா. இவரது நியமனத்திற்கு அமெரிக்கர்கள் சிலர் மத்தியில் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

முன்னதாக, “அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் கீழ் தான் வாழ்கிறோம் என்பது தெரிகிறது” என தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார். டிரம்புடன் மோதல் ஏற்பட்டதையடுத்து புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.