செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து ரயிலில் பயணித்த பள்ளி மாணவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.
செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் எருமை மாடுகள் குறுக்கே வந்ததால் வந்தே பாரத் ரயில் மோதி பல இடங்களில் சேதமடைந்ததை குறிப்பிட்டு ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள், பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைக்கும்பொழுது எருமை மாடுகள் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே வர வேண்டாம் என நூதன முறையில் சுவரொட்டிகளை தயாரித்து எருமை மாடுகளுக்கு வழங்கி அதனிடம் முறையிடம் விதமாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்பதற்காக அவருக்காக மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்நிகழ்ச்சில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார். ஏற்கனவே தெலங்கானா மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையின்போது 4 முறை புறக்கணித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது 5வது முறையாக புறக்கணித்துள்ளார். மேலும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் மாநில பாஜக தலைவர் உள்ளிட்டோர் மட்டுமே இருந்தனர்.
தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ், வந்தே பாரத் ரயில், நெடுசாலை திட்டம் என மொத்தம் ரூ.11,300 கோடி மதிப்பில் புதிய திட்டங்களையும், நிறைவடைந்த திட்டங்களையும் தொடக்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பங்கேற்க மாட்டார் என்றும், அவரை வரவேற்க மாட்டார் எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த நிகழ்ச்சிகளில் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாரிசு அரசியலுக்கும், ஊழலுக்கும் தொடர்ப்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்தப்படுகிறது என்று 14 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. இந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு முழுமையாக முடங்கியது. சலசலப்புடன் தொடங்கிய கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெரும் கூச்சல் குழப்பத்துடன் நிறைவடைந்தது. அதாவது கூட்டம் தொடங்கியது முதல் காங்கிரஸ் அதானி விவகாரத்தை கையில் எடுத்திருந்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க மறுத்துவிட்டது. அதேபோல லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக சலசலப்பை கிளப்பியது. இப்படி இருக்கையில்தான் ராகுல் காந்தியின் பதவிநீக்கம் அறிவிக்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் உறுதியான தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். எனவே இந்த அமர்வு முற்றிலுமாக முடங்கியது. இப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாஜக விமர்சித்து வருகிறது.
இதற்கிடையில்தான் 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. அதாவது, சோனியா, ராகுல் மீது நேஷனல் ஹெரலாட்டு வழக்கு, ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை ஊழல் வழக்கு, தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதா மீதும் இதே வழக்கு, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது தந்தை லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி மகள் மிசா பாரதி ஆகியோர் மீது ஊழல் வழக்கு, மமதாவின் அரசியல் வாரிசும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி மீது நிலக்கரி ஊழல் வழக்கு என மத்திய அரசின் விசாரணை அமைப்புக்கள் எதிர்க்கட்சிகளின் மீது பிடியை இறுக்கியது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடின. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்படுவது 6 மடங்கு அதிகரித்திருக்கிறது என்றும், இந்த விசாரணை அமைப்புகள் பதிவு செய்த வழக்குளில் 95% சதவிகிதமானோர் எதிர்க்கட்சியினர், இதில் தண்டனை பெற்றவர்கள் வெறும் 23 சதவிகிதம்தான் என்று முறையிட்டிருந்தனர். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த விஷயத்தை குறிப்பிட்டுதான் பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்துள்ளார். அவர் பேசியதாவது, “சில ஊழல் கட்சிகள் தங்களின் ஊழல்கள் வெளிவராமல் இருக்க நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அங்கு அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குடும்ப அரசியலுக்கும் ஊழலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதேபோல தெலங்கானா அரசு குறித்து கூறுகையில், “சந்திரசேகர ராவ் அரசின் ஒத்துழைப்பின்மை காரணமாக மாநிலத்திற்கு வரும் திட்டங்கள் தாமதமடைந்து வருகின்றன. இதனால் நான் வருத்தமடைந்துள்ளேன். மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகளில் தாமதம் ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.