இந்தி திணிப்பு விவகாரத்தில் பாஜக எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை திராவிட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தடுக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டார். பின்னர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-
தமிழகத்திற்கு மத்திய அரசு நிதியை வழங்க தமிழக அரசுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது . அதன் அடிப்படையில்தான் சொத்து வரியை உயர்த்தியதாக நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதனை விடுதலைச் சிறுத்தை கட்சி ஆதரிக்கிறது. அதே நேரத்தில், சொத்து வரி உயர்வை தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்து, ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில் வரையறை செய்து வரியை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை பேச வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது கண்டிக்கத்தக்க செயல். இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்தி திணிப்பு முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழி கொண்டு வர வேண்டும் என்ற கருத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. 22 தேசியமொழிகள் உள்ளது. அதிலே இந்தியும் ஒன்று. எனவே இந்தி தெரியாத மாநிலங்களில் கூட இந்தி பேச வேண்டும் என்று பாஜக நினைப்பது கண்டிக்கத்தக்க செயல். இதுபோன்ற ஒரு செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
பாஜகவின் இதுபோன்ற போக்கை முறியடிக்க, இடதுசாரிகள், காங்கிரஸ், மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள், திமுக ஆகியவை ஒன்றிணைந்து தேர்தலுக்கு மட்டுமல்லாமல், தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை கருதி சனாதன சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சி என்றும் துணை நிற்கும்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் துறை சார்பாக கிரிமினல் செயல்முறை அமெண்ட்மெண்ட் பில் தொடர்பாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டாலும் கூட அனைத்து அடையாளங்களும் ஆவணப்படுத்த வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து வந்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
மேகதாது அணை தொடர்பாக பாஜகவினர் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும் கர்நாடகாவில் ஒரு நிலைப்பாடும் இருப்பது மக்களைக் குழப்பும் செயல் எப்பவுமே அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். இது அவர்களின் வழக்கமான செயல். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் .எனவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள தமிழர்கள் தமிழகம் நோக்கி வருகிறார்கள் அவர்களுக்கு தமிழக அரசு உணவு உடை தங்குமிடம் கொடுத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது. அவர்கள் தமிழர்களோடு இணைந்து வாழ தமிழக அரசு மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.